17 July 2013

மீண்டும் சென்னையில் பெண் "தாதாக்கள் '

மீண்டும் சென்னையில் பெண் "தாதாக்கள் '  


சென்னை :
     
                   சென்னை முழுவதும், ரவுடி கும்பல் தலைவன், ரவுடிகள் என, 160க்கும் மேற்பட்டவர்களை, போலீசார், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சமீபத்தில், வடசென்னையில், பழிக்குப் பழியாக நடந்த ரவுடி கொலையில், பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்களையும் தங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள், போலீசார் கொண்டு வந்துள்ளனர்.

தமிழக தலைநகர், சென்னையில், ரவுடிகள் நடவடிக்கை, இன்று, நேற்றல்ல; பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. சாதாரண வழிப்பறி, அடிதடியில் தொடங்கி, கொலை வரை, செய்வது இவர்கள் வாடிக்கை. அடிக்கடி சிறை சென்று வந்தாலும், இவர்கள் கொட்டம் அடங்குவதில்லை.போலீசார் நடவடிக்கை அதிகரிக்கும் போது, குறையும் இவர்கள் ஆட்டம், போலீசார் சற்றே அயர்ந்தால், மீண்டும் துவங்கி விடுகிறது. இடையிடையே, திருந்தாமல் அடம் பிடிக்கும் ரவுடிகள், "என்கவுன்டர்' மூலம் அடக்கப்படுகின்றனர். போலீசாரின் பல்வேறு நடவடிக்கைகளையும் மீறி, 1,000க்கும் மேற்பட்ட ரவுடிகள், சென்னையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.கும்பலாக சேர்ந்து, திட்டமிட்டு காரியத்தை முடிக்கும் பலரையும் கண்காணிக்க, தமிழ்நாடு போலீசிலும், சென்னை போலீசிலும், "திட்ட மிட்டகுற்றங்கள் கண்காணிப்பு பிரிவு' என்ற தனிப் பிரிவு செயல்பட்டு வருகிறது. சென்னையில், "கேங்ஸ்டர்ஸ்' பிரிவு என்று, மத்திய குற்றப்பிரிவின் அங்கமாக, இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக, சென்னையில், ரவுடிகள் அடித்த கொட்டம், தொடர் மோதல்கள், கொலைகள் காரணமாக, அவர்களை ஒடுக்க, "கேங்ஸ்டர்ஸ்' பிரிவுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, ஏற்கனவே இப்பிரிவில், பணியாற்றிய அனுபவம் கொண்ட, ஏ.டி.எஸ்.பி., ஜெயகுமார், இப்பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.இதையடுத்து, கடந்த ஒன்றரை மாதங்களாக, ரவுடிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். 4 மண்டலத்திற்கும், தலா ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.,க்கள், 6 போலீசார் என, 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், அந்தந்த மண்டலத்திற்குள் இருக்கும் ரவுடிகளை பட்டியலிட்டுள்ளனர். இவர்கள், "ஏ பிளஸ்' பிரிவில், ரவுடி கும்பல் தலைவன்கள், 40 பேர்; "ஏ'பிரிவில், 100 ரவுடிகள்; "பி' பிரிவில், ஓரிரு கொலை, கொள்ளைகளில் சம்பந்தப்பட்டு, தற்போது திருந்தி வாழ்பவர்கள்; "சி' பிரிவில், எப்போதாவது, ரவுடிகளுடன் சுற்றுபவர்கள் என, 1,000க்கும் மேற்பட்டவர்களை இனம் கண்டு, அறிக்கை அளித்துள்ளனர்.இந்த அறிக்கை அடிப்படையில், அடுத்த கட்டமாக, அனைவரையும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சென்னையில் இருந்து, ரவுடிகளை வெளியேற்ற போலீசார் முடிவெடுத்திருப்பதாக தெரிந்ததும், ரவுடி கும்பல் தலைவன்கள் 16 பேர், தாங்கள் திருந்தி வாழ்வதாக கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இது போக, 23 ரவுடிகளை, தனிப்படை போலீசார், சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். மேலும், பலரை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை, கொடுங்கையூரில், லாரி வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்த, விஸ்வநாதன் என்பவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பின்னணியில், ஸ்டெல்லா என்பவர் இருப்பது தெரிந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.விசாரணையில் பல விவரங்கள் வெளிவந்தன.

பெண் "தாதா'க்கள்?

             ஸ்டெல்லாவின் கணவர் ஸ்டீபன் ராஜ் என்பவர், 2010ல் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில், விஸ்வநாதனின் மனைவி, கண்ணகியும் சேர்க்கப்பட்டுள்ளார். கண்ணகி, சில ஆண்டுகளாக லாரி வாங்கி, வாடகைக்கு விட்டு, வசதியாக உள்ளார். இதனால், ஆத்திரப்பட்ட ஸ்டெல்லா, பழிக்குப் பழியாக விஸ்வநாதனை ஆள்வைத்து, "போட்டு'த் தள்ளியதும் தெரிய வந்துள்ளது. இதனால், சென்னையில், பெண் தாதாக்கள் உருவெடுத்துள்ளனரோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  
                        
                        சந்தேகம் நியாயம் தான். ஆனால், இது பழிக்கு பழியாக நடந்தது. முன்னதாக, வடசென்னையில், இளாமல்லி, ரமணி, முருகம்மாள் ஆகியோர், ஆண்களுக்கு இணையாக, கூட்டம் சேர்த்து, சாராயம், கஞ்சா விற்பது, ரவுடித்தனத்தில் ஈடுபடுவது என்று இருந்தனர். இன்று அவர்கள் இல்லை. தற்போது, கண்மணியும், ஸ்டெல்லாவும் இந்த வரிசையில் வருகின்றனர்.சென்னையில் தற்போது, ரவுடி கும்பல் தலைவன்கள், ரவுடிகள் என, 160 பேர், தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களின் தகவல் தொடர்பு, போக்குவரத்து உள்ளிட்டவை, தனிப்படை போலீசாரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த 2 பெண்களும், அதில் அடங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.இது ஒரு புறம் இருக்க, வடசென்னை பகுதியில், போலி மதுபானம், கஞ்சா விற்பனை இவற்றில், பெரும்பாலும் பெண்களே ஈடுபட்டு வருவதாக பரவலாக கூறப்படுகிறது. போலீசாரின் கண்காணிப்பு தீவிரமடையும் பட்சத்தில், இவர்கள் நடவடிக்கையும் குறையும்.
           
 

0 Responses to “மீண்டும் சென்னையில் பெண் "தாதாக்கள் ' ”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT