24 June 2013

தீ குளிக்கும் பச்சை மரம் - பிணவறையில் நடக்கும் சமூக விரோத செயல்கள்

தீ குளிக்கும் பச்சை மரம் - திரை விமர்சனம் 

விவசாயம் பொய்த்ததால் தற்கொலை செய்யும் நிழல்கள் ரவியின் மகன் பிரஜன், சித்தியால் மனரீதியாக சித்ரவதை செய்யப்படுகிறார். செய்யாத திருட்டுக்காக ஆசிரியரால் கடுமையாக தண்டிக்கப்பட, ஆத்திரப்படும் பிரஜனும் அவன் நண்பர்களும் அவரைத் தாக்குகின்றனர். இதில் அவர் இறந்து விட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பல வருடங்களுக்கு பின் விடுதலையாகிறார்கள். மற்றவர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார்கள். பிரஜன் நேர்மையாக வாழ தன் ஊருக்கே வருகிறார்.


அங்கு அடைக்கலம் கொடுத்தவர் இறந்துவிட அவர் மகள்களை பாதுகாக்கும் பொறுப்பும் வருகிறது. இளைய மகள் பிரயூவை திருமணம் செய்து கொள்கிறார். வறுமை துரத்த ஆஸ்பத்திரி பிணவறையில் உதவியாளராக சேர்கிறார். அங்கு நடக்கும் கொடூரமான சமூக விரோத செயல்கள் அவரை கோபமூட்டுகிறது. எதிரிகள் உருவாகிறார்கள். பின் அவர் வாழ்க்கை என்னாகிறது என்பது மீதி கதை.

அழுக்கு ஆடை, பறட்டை தலைமுடி, சோகம் சுமக்கும் முகம் என ஆளே மாறியிருக்கிறார் பிரஜன். பிரயூவின் காதலை புறக்கணிப்பதும் பின்பு ஏற்பதுமாக யதார்த்த காதலை பளிச்சென்று முன் வைக்கிறார். பிணவறையில் தொழில் கற்கும்போது அவர் படும் அவஸ்தைகளும், அவர் எடுக்கும் கிளைமாக்ஸ் முடிவும் அதிர வைக்கிறது. சந்திரிகா கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் பிரயூ. ‘அக்கா நான் பாண்டிய காதலிக்கட்டுமா?’ என்று விளையாட்டு பிள்ளையாக கேட்பதும், திருமணத்துக்கு பிறகு பிணம் அறுக்கும் கணவன் கையை முத்தமிட்டு கழுவுவதுமாக நடிப்பில் முத்திரை பதிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட்தான் கதையை அழுத்தமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறார். ஜிதின் ரோஷின் இசை ரசனையாக இருக்கிறது. நேர்மைக்காக வாழ்க்கையை தொலைத்தவனின் வலியை பதிவு செய்த விதத்தில் இயக்குனர்கள் கவனிக்க வைக்கிறார்கள். நேர்மையை விரும்பும் பிரஜன், தன் பள்ளி விரோதியின் கொலையை நியாயப்படுத்துவதும், அதை தற்கொலையாக மாற்ற முயற்சிப்பதும் எப்படி நியாயமாகும்? கிளைமாக்சில் அந்த போலீஸ் அதிகாரியும், டாக்டரும் இணைந்து செய்யும் வேலையில் சினிமாத்தனம் என சில குறைகள் இருந்தாலும் ரசிக்கலாம்.

0 Responses to “தீ குளிக்கும் பச்சை மரம் - பிணவறையில் நடக்கும் சமூக விரோத செயல்கள்”

Post a Comment

Viewers

Flag Counter
All Rights Reserved Ramnad2Day | 7Tech Template by S.S.KarT